அதற்கும் விதிமுறைகள் வகுத்துச் சென்ற நம் முன்னோர்களைப் போற்றி வணங்குவோம் !

முதலில் ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் பற்றிக் காண்போம்.அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்யக் கூடியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.உடல் முழுவதும் முதலில் பூமியில் படும்படி பொருத்தி,

(1) வலது கையை முதலில் தலைக்கு நேரே தூக்கி பிறகு

(2) இடது கையை தலைக்கு நேரே தூக்கி அஞ்சலி (கூப்பிய கரம்) செய்யவேண்டும். முகத்தை நேராக தரையில் கொண்டு வந்து

(3) நெற்றியைத் தரையில் படச் செய்து, முன்னர் செய்தது போல வலக்கையை இடுப்புக்கு நேரே கொண்டுவந்து,வலது புஜம் எனும் வலது தோள்
(4) தரையில் படச்செய்து,பிறகு இடது கையை இடுப்புக்குக் கொண்டு வந்து,இடது
(5) தோளைத் தரையில் படச்செய்ய வேண்டும்.பின்னர், முதலில் வலது

(6) காதையும் பிறகு இடது

(7) காதையும் தரையில் படச்செய்ய வேண்டும்.பின்னர் மோவாய்

(8) தரையில் பட வேண்டும்.இதுவே ஸாஷ்டாங்க (எட்டு அங்கங்களும் – எட்டு உறுப்புகளும் தரையில்படக்கூடிய) நமஸ்காரம் எனப்படும். இறைவன் படைத்த உடல் இறைவனுக்கே அர்ப்பணம் எனும் செயலைக் காட்டுவதே அஷ்டாங்க (8 உடல் உறுப்புகள்) நமஸ்காரம். இந்த நமஸ்காரம் தெய்வீகப் பலனை வாரி வழங்கக் கூடியது.

பெண்கள் செய்யக் கூடியது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.பெண்கள் முதலில் இரண்டு (1,2) முழங்கால்களைத் தரையில் பொருந்தச் செய்து, முதுகை வளைத்து, பின் இரண்டு (3,4) கைகளையும் கூப்பியவாறு தரையில் படச் செய்து, பின் நெற்றியினை (5) தரையில் படச் செய்ய வேண்டும்.இதுவே ஐந்து உடல் உறுப்புகள் தரையில் படச்செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். பெண்களுக்கு நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மணவாழ்க்கையையும் அருளுவது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.பெண்களின் திருமாங்கல்யம் எந்நிலையிலும் தரையில் படக்கூடாது.

அங்கப்ரதக்ஷிணம் : 

தெய்வங்களுக்கு அங்கப்பிரதக்ஷிணம் செய்வது என்பது ஒரு விசேஷ வழிபாடு. உடலின் அனைத்து பாகங்களும் தரையில் படும்படி நமஸ்கரித்துக் கொண்டே ஆலயத்தை வலம் வருவது பெரும் புண்யங்களைத் தரக்கூடியது. பக்தர்கள், பெரியோர்கள், தவசீலர்கள் வலம் வந்த பாதையில் அவர்களின் பாதங்கள் பட்ட இடங்களையும் நமஸ்கரிப்பதால், அடியவர்க்கும் அடியவராக விளங்கக்கூடிய பெருமானின் பூரண அருளைத் தரக் கூடியது. ‘நான்’ என்ற அகந்தையை நீக்கக் கூடியது. இறைவன் ஒருவனைத் தவிர வேறு கதியில்லை என்ற செயலைக் காட்டுவது அங்க பிரதக்ஷ¢ணம் ஆகும்.

யாரை நமஸ்கரிக்கக் கூடாது ?

இறைவனை எண்ணிக்கொண்டு ஜெபம் செய்து கொண்டிருப்பவரையும், தானம் செய்து கொண்டிருப்பவரையும், தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருப்பவரையும், யாகங்கள் செய்து கொண்டிருப்பவரையும், தர்ப்பணம் செய்து கொண்டிருப்பவரையும், சிரார்த்தம் செய்பவரையும் நமஸ்கரிக்கக் கூடாது.கெட்ட மரியாதையுள்ளவனையும், நன்றி மறந்தவனையும், கள்வனையும், வஞ்சகனையும், பித்தனையும், மூர்க்கனையும், சூதாடுபவனையும், தன்னிச்சையாக நடந்துகொண்டிருப்பவனையும், அசுசியானவனையும், எண்ணெய் தேய்த்துக் கொண்டிருப்பவனையும், ஜெபம் செய்து கொண்டிருப்பவனையும், வேதத்தை நிந்திப்பவனையும், காரூட வித்தைக்காரனையும், சோதிடங் கூறிப் பிழைப்பவனையும், பாதகனையும், அது போலவே புருஷனைக் கொன்ற பூவையையும், ரஜஸ்வலையானவளையும், விபச்சாரம் செய்பவளையும், பிரசவித்தவளையும், அதிகக் கோபக்காரனையும் எக்காரணம் கொண்டும் நமஸ்கரிக்கக் கூடாது.
பெரும் புண்யம் நல்கும் நமஸ்காரம் :பெரும் தவசீலர்கள் உள்ள சபையிலும், தெய்வங்கள் உறைந்திருக்கும் யாகசாலையிலும், ஆலயங்களிலும், புண்ய §க்ஷத்ரங்களிலும், புண்ய தீர்த்தங்களை நோக்கியும், வேத கோஷம் முழங்கும் இடங்களிலும் – செய்யக் கூடிய பிரத்யேக நமஸ்காரங்கள் பலமடங்கு புண்யங்களைத் தரக்கூடியது.
நமஸ்கரிக்கும் திசை :நமஸ்கரிக்கும் போது நமது தலை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ அமையவேண்டும். தெற்கு நோக்கி நமஸ்கரித்தல் கூடாது.
பெரியவர்களையும் மஹான்களையும் நமஸ்கரிப்பதால், ஆயுள், பலம், கீர்த்தி, செல்வம், சந்ததி முதலியன மென்மேலும் அபிவிருத்தியடைகின்றன என சாத்திரங்கள் கூறுகின்றன. . 
பெரியவர்களை முதலில், நமஸ்கரித்த பிறகு தம்முடைய ப்ரவரம் கோத்ரம், சூத்ரம் வேதசாகை, பெயர் என்று இவைகளை வரிசைப்படி தாம் நமஸ்கரிக்கும் பெரியவரின் காதில் விழும்படி சொல்லி முறையாக அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதற்கு, “அபிவாதனம்” என்று பெயர்.
நாம் நமஸ்காரம் செய்யும் அப்பெரியவர் நம்மை, “ஆயுஷ்மாநேதி” அல்லது, “தீர்க்காயுஷ்மாந் பவ.” என்று சொல்லுவதோடு நம் பெயரையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். 
சன்யாசிகளுக்கு யதிகளுக்கு, ஸ்திரிகளுக்கு நமஸ்காரம் செய்யலாம். அபிவாதனம் செய்யக்கூடாது.  ஆனால் தாயருக்கு விதிவிலக்கு உண்டு.  சன்யாசிகளை நான்கு முறை நமஸ்கரித்தல் வேண்டும்.  அவரவர் குல வழக்குப்படி எத்தனைதரம் நமஸ்கரிக்க வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்க.
மாதா எனும் அன்னைக்கும், பிதா எனும்  தந்தைக்கும் தினமும் பாத பூஜை செய்பவருக்கும், பாதத்தைத் தொட்டு வணங்குபவருக்கும் ஏழேழு ஜன்மங்களிலும் செய்த பாவம் தொலையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.
பகவானை (வீடுகளில்கூட,) நமஸ்கரித்தால் அபிவாதனம் செய்யக் கூடாது. பெரியவர்கள் கூட்டமாக வந்தால், நமஸ்கரிக்கலாம்; அபிவாதனம் கிடையாது. 

பெரியவர்களேயானாலும், ஆலயத்தில் சந்தித்தால், கை கூப்பி நமஸ்கரித்தால் மட்டுமே போதுமானது. அபிவாதனம் கிடையாது. படுத்துக் கொண்டிருப்பவர்களையும், ஈரத்துணியுடன் இருப்பவர்களையும் நமஸ்கரிக்கவோ அபிவாதனம் செய்யவோ கூடாது. விருத்தி, க்ஷ்யம் போன்ற தீட்டுக்காலங்களில் யாரையும் நமஸ்கரிக்கவோ அபிவாதனம் செய்யவோ கூடாது. தம்மைக் காட்டிலும் யோக்கியதாம்சம் குறைவான சிறியவர்களை நமஸ்கரிக்கக் கூடாது. அபிவாதனம் செய்யக்கூடாது.

இரு கைகளை நெற்றிக்கு நேராக கூப்பி குருவையும்,  சக மனிதர்களையும், இதமான நண்பர்களயும் இரு கைகளை இருதயத்துக்கு நேராக கூப்பியும்,  மரியாதைக்கு உரியவர்களை நம் முகத்துக்கு நேராக கைகளை கூப்பியும் வணங்குதல்  நலம்.

தலை மட்டுமே குனிந்து வணங்கல் ஏகாந்த நமஸ்கராம் எனப்படும். தலைக்கு மேல் இரு கரங்கூப்பி வணங்குவது திரியங்க நமஸ்காரம் எனப்படும். நம் உடலில் உள்ள எட்டு அங்கங்களும் பூமியில் படும்படி வீழ்ந்து வணங்குதல் சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும். இதை தண்டனிடுதல் என்பர். அல்லது தண்டம் சமர்ப்பித்தல் என்பர். தண்டம் என்பது கழி அல்லது கோல். கையில் பிடித்துள்ள ஒரு கோலை விட்டு விட்டால் அது கீழே விழுந்து விடும். நமஸ்காரம் செய்வதை தண்டம் போல் செய்ய வேண்டுமென்று சொல்வது வழக்கம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை, அது தண்டமாகி விட்டது என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். இதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்து விட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கி விட்டு அதற்கு அடையாளமாக ஈஸ்வரன் முன் இந்தச் சரீரத்தை கீழே போட வேண்டும். இதுதான் தண்டம் சமர்ப்பித்தல் என்கிறார் ஜகத்குருஸ்ரீ ஆச்சார்ய சுவாமிகள்.  இந்த நமஸ்காரம் தாய், தந்தை, குரு, தேவர், பெரியோர், மூத்தோர் முதலியவர்களுக்கு உரியதாகும்.

தவத்தாலும்,  வயதாலும்,  ஞானத்தாலும்,  உயர்ந்தவர்கள் நித்தியம் நமஸ்கரித்தக்கவர்கள். எந்த குருவானவர் வேத சாஸ்திர உபதேசத்தால் துக்கத்தைப் போக்கடிக்கத் தக்கவரோ அவரை நித்தியம் நமஸ்கரிக்க வேண்டும்.

தெய்வங்களை வணங்கும் வகைகள் பற்றி சாஸ்திரங்கள் கூறுவதைப் பார்ப்போம்.கோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும். கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தெய்வ ஸன்னிதானத்திலுள்ள தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிவிட்டு, ஆலயத்தில் பலி பீடத்திற்குப் பின்னுள்ள கொடிக் கம்பத்தின் முன்புதான் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். ஆலயத்தின் உள்ளே எந்தச் சன்னதிகளின் முன்பும் நமஸ்காரம் செய்யக் கூடாது. பலிபீடம் இறைவனின் மாயா சக்கரம். நாம் பிறப்பு இறப்பு என்னும் மாயா சக்கரமான பலி பீடத்தில் வணங்குவதும், அதை உட்படுத்தி வலம் வருவதும் ஸ்தூல சூட்சும காரண சரீரங்களிலிருந்து என்னை விடுவிப்பாயாக என்று வேண்டுவதைக் குறிப்பதாகும்.

கிழக்கு மேற்கு நோக்கிய சன்னதிகளில் வடக்கே தலை வைத்தும், தெற்கு வடக்கு நோக்கிய சன்னதிகளில் கிழக்கே தலை வைத்தும் விழுந்தும் நமஸ்கரிக்க வேண்டும். தான் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சன்னதியும் இருத்தல் கூடாது. கொடி மரத்தின் முன்னால் விழுந்து வணங்கினால் அங்கு எத் தெய்வச் சன்னதியும் இருக்காது. எனவேதான் கோயிலில் இங்கு மட்டும்தான் விழுந்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர். தெற்கு நோக்கி நமஸ்கரித்தல் கூடாது. 
கீழே விழுந்தால் நமஸ்காரம் செய்தால் பிறவி இல்லை! சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது.முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.