பகுதி 1:
சிருஷ்டி (அ) படைத்தல் பற்றி பரப்பிரம்மம், அண்டம், நிர்மயம், சுவயம்பு, பிரம்மா என்று தொடங்கி மற்ற புராணங்களில் கூறியவையே இங்கும் கூறப்படுகின்றன. சிறுசிறு மாறுதல்களுடன்.
பிரம்மனின் சிருஷ்டி பகலில் நடக்கிறது. இரவில் அழிவு ஏற்படுகிறது. அந்த அழிவு பிரளயம் எனப்படுகிறது. இரவு முடிந்து பகல் தோன்ற படைத்தல் தொழில் நடக்கிறது. அதுவே சிருஷ்டியாகும். இதிலும் மும்மூர்த்தி, மூன்று குணங்கள் பற்றி பேசப்படுகிறது. பிரம்மா ராஜஸ குணம், விஷ்ணு சாத்விக குணம், சிவன் தாமஸ குணம். எல்லாமே பிரம்மத்திலிருந்து தோன்றியவையே. கல்பங்கள் பல. அவற்றில் தற்போது நடைபெறுவது வராஹ கல்பம். ஒவ்வொரு கல்பத்திலும் பதினான்கு மன்வந்தரங்கள்; ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மனுவின் ஆட்சி. வராஹ அவதாரத்தின் காரணமாக வராஹ கல்பம். பிரம்மன் நாராயணனே.
நர = நீர்; அயன = ஓய்விடம்.
பிரளய ஜல மயத்தில் ஓய்வு கொண்டதால் நாராயணன். பிரம்மா ஏழு கடல்கள், ஏழு நிலப்பகுதிகள் தோற்றுவித்தார். அடுத்து அவர் உடலிலிருந்தே தேவர், அசுரர், யக்ஷர்கள் ஆகிய பல்வகையினர் தோன்றினர்.
பிரம்மாவின் மனோ சக்தியிலிருந்து பிருகு முதலிய ஒன்பது ரிஷிகளும், சனந்த, சனக, சனாதன, சனக்குமார ரிஷிகளும் தோன்றினர். இவற்றால் மனஅமைதி பெறாத பிரம்மா தன்னிலிருந்தே முதல் ஆண், பெண் இருவரையும் தோற்றுவிக்க, ஆண் மனு என்றும், பெண் சதரூபை என்றும் பெயர் பெற்றனர். இவர்களுடைய புத்திரர்களில் பிரியவிரதனும், உத்தானபாதனும், பிரசுதி, ஆக்ருதி என்ற இரண்டு புத்திரிகளும் முக்கியமானார். பிரசுதி, தக்ஷ பிரஜாபதியை மணந்தான். இப்படி சிருஷ்டி வளர்கிறது. சிருஷ்டியில் மூல சிருஷ்டி (சரிகம்) ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றினர். இப்படி சிருஷ்டியும், பிரளய அழிவும் தொன்று தொட்டு மாறி மாறி ஏற்பட்டு வருகிறது என்று அறிய வேண்டும்.