நான்கு யுகங்கள்

சத்தியயுகம், (கிருத) திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவை நான்கும் சேர்ந்து மஹாயுகம் ஆகும். கட்டை விரல் முதல் சிறு விரல் வரை நீளம் ஒரு விதஸ்தி. இது பன்னிரண்டு அங்குலிக்குச் சமம். இருபது அங்குலிகள் ஒரு ரத்னி. இருபது ரத்னிகள் ஒரு தனு. எண்ணாயிரம் தனுக்கள் ஒரு யோஜனை ஆகும். வருணாசிரம தரும வழியில் நான்கு வருணத்தினர் இருந்தனர். அவர்கள் தொழில்களும் நால்வகைப்பட்டன. உணவுக்காக மக்கள் பிரம்மாவை வேண்ட பூமியிலிருந்து பால், மரம், புதர், மூலிகைகள், தானியங்கள் தோற்றுவித்தார். பிருதி மன்னன் பூமியிலிருந்து பால் கறந்ததால் பூமி பிருதிவி எனப்படுகிறது. வருணாசிரம தர்மத்தின்படி நான்கு வருணத்தினர் ஏற்பட்டதுடன் ஒவ்வொரு வரும் நான்கு நிலைகளைக் கையாள வேண்டும் எனப்பட்டது. பிரம்மச்சரியம், கிரகஸ்தியம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்பவை. இவ்வாறான மாறுதல்களையெல்லாம் உயிர்கள் நன்கு வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே பிரம்மா ஏற்படுத்தினர்.

யோகமும், யோகசாதனையும்

யஜ்ஞ, யாகாதிகள், மதச்சடங்குகளால் பிரம்மனை அறிய முடியாது. யோக சாதனையால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்தச் சாதனையில் வெற்றி பெறுவோர் பிறப்பு, இறப்புகளையும் வெல்வர் எனப்படுகிறது. ஜீவாத்மா, பரமாத்மாவுடன் அதாவது பரப்பிரம்மத்துடன் இணைவதே யோகம் ஆகும். யோகம் செய்கையில் ஐந்து முக்கியமானவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றின் குறிக்கோள் பற்றி அறியலாம்.

பிராணாயாமம் : உடலின் மாசு நீக்கித் தூய்மை செய்கிறது.

பிராணாயாமப் பலன்கள்:

அ) பாவங்கள் தொலையும். மன அமைதி (அ) சாந்தம் அடைவது.
ஆ) அகம்பாவம், அசூயை, பொறாமை போன்ற தீயவற்றை வெற்றி கொள்ளுதல்-அதாவது பிரசாந்தி தெளிதல் ஆகும்.
இ) ரிஷிகள் போல் அகக்கண் பெறுதல்-தீப்தி (அ) ஒளி எனப்படும்.
ஈ) மனமும் புலன்களும் அமைதியாதல் – பிரசாதம் – ஆதரவு ஆகும். பிராணாயாமம் நல்ல உடல்நிலையில், அமைதியான சூழ்நிலையில் செய்யப்பட வேண்டும். பிராணாயாமத்தில் மூச்சு அடக்கப்படுகிறது.

பிரத்தியாஹாரம் : உலகப்பொருள்களின் மீதுள்ள பற்றை மனம் நீக்கிவிட இது ஐந்தடக்கும் ஆமைக்கும் ஒக்கும்.

தியானம் : உடற்பகுதி குணங்களிலிருந்து உயர்ந்த நிலைக்கு உயர்த்துவது.

தாரணம் : நினைவில் இருத்தல். ஞானம் அறிதல்.
இவற்றைக் கவனம் செலுத்திப் பழகாவிட்டால் நன்மைக்குப் பதில் தீமையே ஏற்படும். யோகத்தைச் சரியான முறையில் பழகி வெற்றிக்காண்பவர் அஷ்டமாசித்திகளைப் பெறுவர்.